Wednesday, December 13, 2006

இந்து மதம்

இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது? இக்கேள்விகளுக்கு பகுத்தறிவு பகலவன் ஈ.வெ.ரா. என்ன சொல்கிறார்? பார்ப்போம்.

இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது? அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம் உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப் பட்டு இருக்கிறோம். இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும், ஒரு கடவுள் காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும், ஒரு மதத்தவனை மற்றொரு மதத்தவன் பார்ப்பது பாவம் என்றும் சண்டையிடிகிறோமேயல்லாமல், இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை. இந்து மதம் எப்பொழுது உருவானது என்றால், அது அனாதி மதம், வேத காலம் தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் எப்பொழுது யாரால் உருவானது என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் " அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா? என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது; நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும்; யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் " என்கிறார்கள்.

அது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா? இல்லை. ஆயிரக் கணக்கான வருடங்களுக்குமுன் எழுதப் பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல உள்ளனவே! அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத் தெரியவில்லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது? இந்து என்ற வார்த்தை 'பெர்ஷியன்' பாஷையில்தான் வழங்கப் படுகிறது. அதற்கு அர்த்தம் என்னவென்றால், 'திருடன்' என்பது பொருள். இந்து என்ற வார்த்தை, சிந்து நதிக்கரை வழியே ஆரியர்கள் வந்ததால், 'சிந்து' 'இந்து' வாகி பின் இந்தியனாகிவிட்டதாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உள்ளது, அதே மாதிரி, இந்து சமயம் பார்ப்பனர் சமயம் என்றும் ஆங்கில ஏடுகள் ஆதாரத்தோடு கூறுகிறது. அவ்வாறே ஆங்கில ஏடுகளை நம்பாமல் ஆரியர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேதம் சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம், புராணம் என்பன போன்ற ஆதாரங்களில் ஒரு இடத்தில் கூட இந்து என்ற பெயர் இடம் பெறவில்லை...

ஈ.வெ.ரா. பெரியார் 1923.

Friday, December 8, 2006

பெரியார் மொழி

இந்த பதிப்பில் பெரியார் ஆற்றிய மிக மிக்கியமான உரைகளை எடுத்துக்காட்ட உள்ளேன். பெரியார் பகுத்தறிவு குறித்தும் கருத்துரிமை குறித்தும் ஆற்றிய மிக முக்கியமான உரை இது. இதை அடிப்படையாகக்கொண்டே அவரது மற்ற உரைகளை ஆராய வேண்டும் என்பது என் கருத்து.

"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. "

முகவுரை

பெரியார் நாத்திகம், பிராமண எதிர்ப்பு தவிர வேறு எதுவும் பெரிதாக செய்யவில்லை என்ற தவறான கருத்து, அவரை பற்றி தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத, அவரை வெறுக்கும் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. நான் அறிந்த பெரியார் பற்றியும் அவர் ஆற்றிய முக்கிய சொற்பொலிவுகளையும், ஆவர் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டு பற்றியும் இந்த பதிவில் பதிக்கவுள்ளேன். அவர் குறித்த வாசகர் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.
பெரியாரை போற்ற நான் நாத்திகனாக மாற வேண்டியதில்லை என்பது என் கருத்து